மன்னன் ஒருவன் வேட்டைக்கு வந்தபோது இங்குள்ள குளத்தில் அதிசயமான தாமரை மலரைக் கண்டான். அம்மலரைப் பறிக்க முற்படும்போது அது அகப்படாமல் சுற்றி, சுற்றி வரவே, கோபமடைந்த மன்னன் அதன்மீது அம்பு எய்தான். உடனே குளம் முழுவதும் செந்நிறமானது. மன்னன் அதிர்ந்துபோய் அருகே சென்று பார்க்க, மலரின்மீது சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அதை எடுத்து, குளக்கரையில் ஒரு கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்தான் என்று தலவரலாறு கூறுகிறது.
மன்னன் அம்பு எய்த தழும்பு இறைவன் மீது உள்ளது. அதனால் அவருக்கு முடீஸ்வரர் என்ற பெயர் வந்தது. கல்வெட்டுக்களில் இக்கோயில் மௌலி கிராமம் என்று உள்ளது. தற்போது சுருங்கி கிராமம் என்று அழைக்கப்படுகிறது. சிறிய கோயில், சிறிய மூலவர் மற்றும் அம்பிகை. இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம். பிரம்மனும், இந்திரனும் பூஜித்த தலம். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின்கீழ் அமராமல் இடப வாகனத்துடன் உள்ள காட்சி விசேஷம்.
அப்பர் ஒரு பதிகம் பாடியுள்ளார். கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தொடர்புக்கு : 04146-206700.
|